நானே வெனிசுலா அதிபர்….! டிரம்ப் போட்ட ஒற்றை போஸ்டால் வெடித்த சர்ச்சை…. பின்னணியில் இருக்கும் உண்மை என்ன…?

By Devi Ramu on தை 12, 2026

Spread the love

அமெரிக்க ராணுவம் வெனிசுலா மீது சமீபத்தில் அதிரடித் தாக்குதல் நடத்தி, அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைக் கைது செய்து நியூயார்க்கிற்கு கொண்டு சென்றுள்ளது. இந்த பரபரப்பான சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னைத்தானே வெனிசுலாவின் தற்காலிக அதிபராக அறிவித்துக் கொண்டது போன்ற ஒரு போலி விக்கிபீடியா புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் தானும், தனது துணை அதிபர் ஜே.டி. வான்ஸும் வெனிசுலாவை வழிநடத்துவது போலக் காட்டியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் டிரம்ப் வெனிசுலாவின் அதிபராக அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்கவில்லை என்பதும், அது எடிட் செய்யப்பட்ட படம் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

   

வெனிசுலாவில் தற்போது டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அந்த நாட்டின் நிர்வாகத்தை அமெரிக்கா தொடர்ந்து கண்காணிக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், வெனிசுலாவின் நட்பு நாடான கியூபாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள டிரம்ப், அந்த நாட்டிற்கான பொருளாதார உதவிகள் துண்டிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

   

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் கீழ் மதுரோ சிறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த அதிரடித் தலையீடு உலக அரசியலில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளம் வாயிலாக டிரம்ப் விடுத்துள்ள இந்த அறிவிப்புகள் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.