பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்ட விபத்தில் சுமார் 5 பேர் உயிரிழந்ததாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முல்தான் நகரில் உள்ள ஷெர் ஷா பாலம் அருகே சென்றுகொண்டிருந்த ‘ரெஹ்மான் பாபா எக்ஸ்பிரஸ்’ ரயில் திடீரென தடம் புரண்டது. இந்த விபத்தால் ரயிலில் பயணித்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
விபத்தில் சிக்கிய ரயிலின் பெட்டிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 13 பெட்டிகளில் சோதனை நிறைவடைந்துள்ள நிலையில், மற்றொரு பெட்டியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், ரயில் தடம் புரண்டதற்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை. விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமா என்ற கவலை எழுந்துள்ளது.
