ஐதராபாத் நானக்ராம்குடாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதித்து இளம் மென்பொருள் பொறியாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூரியபேட்டை பகுதியைச் சேர்ந்த பரத் என்ற இந்த வாலிபர், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சமீபத்தில் சொந்த வேலை காரணமாக இங்கு வந்த இவர், ‘கோல்ஃப் எட்ஜ்’ அடுக்குமாடி குடியிருப்பின் 30-வது தளத்தில் வீடு எடுத்துத் தங்கியுள்ளார்.
புதிய குடியிருப்பில் குடிபுகுந்து வெறும் இரண்டு நாட்களே ஆன நிலையில், எதிர்பாராதவிதமாக அவர் மாடியிலிருந்து குதித்து விபரீத முடிவை எடுத்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த துயர முடிவுக்கு பணிச்சுமை காரணமா அல்லது குடும்பப் பிரச்சனையா என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
