கன்னியாகுமரி மாவட்டம் நேதாஜி காலனியை சேர்ந்த மகேஷ் என்பவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவருக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில் இரண்டாவது மகனான பிரதீப் (21) அதே பகுதியில் பெயிண்டர் ஆக வேலை செய்து வந்தார். இதனிடையே அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் 16 வயதுடைய தீபிகா என்ற சிறுமியுடன் பிரதீப்புக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களுடைய பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனால் தொடர்ந்து இருவரும் காதலித்து வந்த நிலையில் அடிக்கடி வெளியில் சுற்றி வந்துள்ளனர்.
சிறுமி தீபிகாவின் தந்தை கடந்த 10 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தாய் விஜயலட்சுமி தூய்மை பணியாளராக பணியாற்றி வருகின்றார். தீபிகா மற்றும் பிரதீப் காதல் குறித்து அறிந்த விஜயலட்சுமி அவருடைய மகளை கண்டித்ததாக தெரிகிறது. இருந்தாலும் தீபிகா தொடர்ந்து பிரதிப்புடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் பிரதீப் தந்தையின் ஆட்டோவில் தீபிகா நேற்று முன்தினம் அவருடைய வீட்டுக்கு வந்துள்ளார். இதனை அறிந்த விஜயலட்சுமி மீண்டும் தனது மகளை கடுமையான வார்த்தைகளால் பேசி கண்டித்துள்ளார். இதனால் மனவருத்தம் அடைந்த மாணவி வீட்டில் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று விஜயலட்சுமி வேலைக்கு சென்று விட்ட நிலையில் தன்னுடைய தங்கையுடன் வீட்டில் தனியாக இருந்த தீபிகா தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டு பயந்த தீபிகாவின் தங்கை இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீபிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே தீபிகா தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்து தீபிகாவின் காதலன் பிரதீப் மிகுந்த சோகத்தில் இருந்ததால் தனது காதலியின் உடல் கொண்டு செல்லப்பட்டதை கண்டு தாங்காத மனவேதனையில் இருந்த பிரதீப் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து போலீசார் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் காதலி இறந்த சில மணி நேரத்தில் காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது
