வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவன், பள்ளிக்குச் செல்ல வழக்கமான மிதிவண்டி அல்லது பிற வாகனங்களைப் பயன்படுத்தாமல், ஒரு பெரிய ஆட்டின் மீது அமர்ந்து பயணம் செய்யும் வினோதமான வீடியோ இணையத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்து, தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
பள்ளி சீருடை அணிந்து, முதுகில் பள்ளிப் பையை மாட்டிக்கொண்டு அந்த சிறுவன் முழு நம்பிக்கையுடனும், மிக எளிதாகவும் ஆட்டின் மீது அமர்ந்து சவாரி செய்கிறான். மேலும், ஆட்டைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக கையில் ஒரு சிறிய குச்சியையும் வைத்துள்ளான். இன்றைய நவீன காலத்தில் குழந்தைகள் ஆடம்பர வாகனங்களில் பள்ளிக்குச் செல்லும் நிலையில், இந்த சிறுவனின் கிராமத்து எளிய சவாரி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
எக்ஸ் தளத்தில் விஷால் மாளவி என்பவரால் பகிரப்பட்ட இந்த வீடியோ, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் இந்த சிறுவனின் மழலை மாறா முகபாவனையையும், அவனது அசாத்திய சவாரியையும் பாராட்டி, “இதுபோன்ற எளிய மற்றும் அழகான தருணங்கள் தான் சமூக ஊடகங்களை மகிழ்ச்சியான இடமாக மாற்றுகின்றன” என்று தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
