நாகை மாவட்டம் உத்தமசோழபுரம் கிராமத்தில், சாலையோரத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 80 வயது மூதாட்டியிடம் வாலிபர் ஒருவர் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூதாட்டி ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பகுதிக்குக் குடிபோதையில் வந்த அந்த நபர், வயது வித்தியாசம் பாராமல் மூதாட்டியைப் பலவந்தமாகப் பிடித்து, கடித்துக் குதறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அந்தச் சமயத்தில் அந்தச் சாலையின் வழியே சென்ற பொதுமக்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து சத்தமிட்டுள்ளனர்.
பொதுமக்களின் சத்தம் கேட்டு அந்த நபர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். எனினும், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அவரைத் துரத்திப் பிடித்து தர்ம அடி கொடுத்ததோடு, உடனடியாக நாகூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரிடம், பொதுமக்கள் அந்த நபரை ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்ட மூதாட்டி, தன்னை அந்த நபர் கொடூரமாகக் கடித்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் காவல்துறையினரிடம் அழுதுகொண்டே வாக்குமூலம் அளித்தார்.
அங்கு கூடியிருந்த பொதுமக்கள், “ஒருவேளை இந்த கொடூரத்தால் மூதாட்டி இறந்திருந்தால் என்ன செய்வது? இவரை எக்காரணம் கொண்டும் சும்மா விடக்கூடாது, கடுமையான பிரிவுகளில் சிறையில் அடைக்க வேண்டும்” என்று காவல்துறையினரிடம் ஆவேசமாக வலியுறுத்தினர். இதனையடுத்து, பிடிபட்ட நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார், அவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர், பின்னணி என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை டிஎஸ்பி ராமச்சந்திர மூர்த்தி இந்த விவகாரத்தில் நேரடியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
