திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள சித்தாநத்தத்தைச் சேர்ந்த அஜித்குமார் (27) என்பவரும், முடுக்குப்பட்டியைச் சேர்ந்த சித்திரைவள்ளி (26) என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, கடந்த 25-ம் தேதி வயலூர் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கோரி மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மனு அளித்தனர். பின்னர் அவர்கள் அஜித்குமார் வீட்டில் வசித்து வந்தனர்.
இதற்கிடையே, சித்திரைவள்ளி வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுவிட்டதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், இருவரும் விசாரணைக்காக மணப்பாறை காவல் நிலையத்திற்கு வந்தனர். விசாரணை முடிந்து அவர்கள் ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பெண்ணின் சகோதரர் மலைச்சாமி மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் இரண்டு கார்களில் வந்து ஆட்டோவை வழிமறித்தனர். அஜித்குமாரை கீழே தள்ளிவிட்டு, சித்திரைவள்ளியை காரில் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றனர்.
மனைவி கடத்தப்பட்டது குறித்து அஜித்குமார் உடனடியாக மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அதிரடியாக செயல்பட்ட போலீஸார், தேடுதல் வேட்டை நடத்தி கடத்தப்பட்ட 3 மணி நேரத்திற்குள் யாகபுரத்தில் உள்ள பாட்டி வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சித்திரைவள்ளியை பத்திரமாக மீட்டனர். இதுதொடர்பாக மலைச்சாமி, முருகேசன், பிரகாஷ் ஆகிய 3 பேரைக் கைது செய்து காரையும் பறிமுதல் செய்த போலீஸார், தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரைத் தேடி வருவதோடு, பெண்ணின் குடும்பத்தாருக்கும் பலத்த எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
