“பாத்ரூமைப் பார்த்தாலே அலறும் குழந்தை…” வீடியோக்களைப் பார்த்து உறைந்துபோன தம்பதி…! காப்பகத்தின் அதிர்ச்சிப் பின்னணி…!!

By Swetha on ஆடி 5, 2026

Spread the love

பெங்களூருவில் உள்ள பகல் நேரக் குழந்தைகள் காப்பகத்தில், ஊழியர்கள் சிலர் அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் போட்டு அடைப்பதாக வெளியான செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக குழந்தைகள் உதவி எண்ணுக்கு வந்த புகாரில், குழந்தைகள் துன்புறுத்தப்படுவதற்கான வீடியோ ஆதாரங்களும் இணைக்கப்பட்டிருந்தன. அழும் பிள்ளைகளின் அழுகையை அடக்குவதற்காக அவர்களை வாஷிங் மெஷினுக்குள் பூட்டுவது, குளியலறைக்குள் அடைப்பது மற்றும் டாய்லெட் கை ஷவரைக் கொண்டு குழந்தைகளின் வாய்க்குள் தண்ணீரைப் பீய்ச்சியடிப்பது போன்ற கொடூரமான செயல்களில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. இந்த அதிரவைக்கும் தகவலைத் தொடர்ந்து, மஞ்சுளா, விஜயலக்‌ஷ்மி, பவானி, சிந்து மற்றும் பிந்து ஆகிய ஐந்து பெண் ஊழியர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்தக் காப்பகத்தில் நடத்தப்பட்ட விதத்தால் அங்கு தங்கியிருந்த குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகப் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் தம்பதியர் ஒருவர், தங்களது இரண்டரை வயது குழந்தையை இந்தக் காப்பகத்தில் விட்டு வந்துள்ளனர். அங்கு செல்லத் தொடங்கியதிலிருந்தே, அந்த குழந்தை பாத்ரூமுக்குள் நுழைய அடம் பிடிப்பதையும், குளிக்க மறுத்து அழுவதோடு அங்கிருந்து தப்பியோட முயல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது காப்பகம் குறித்த வீடியோக்கள் வெளியான பிறகே, தங்கள் குழந்தை அடிக்கடி பாத்ரூமுக்குள் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதால் தான், அதற்கு பாத்ரூம் என்றாலே பயம் உருவாகியுள்ளது என்பதை அந்தப் பெற்றோர் புரிந்து கொண்டுள்ளனர்.

   

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நம்பி ஒப்படைத்துச் செல்லும் காப்பகத்தில், பிஞ்சுக் குழந்தைகள் மீதான இத்தகைய அராஜகம் சமூகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலையை நினைத்து பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். தற்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காப்பக ஊழியர்களில் ஒருவரான விஜயலக்‌ஷ்மி என்ற பெண்ணை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.