பள்ளியில் ஆசிரியை ஒருவர் மாணவர்களுக்குச் சுதந்திர தினம் குறித்துப் பாடம் நடத்தும்போது, அதைத் தனது மொபைல் போனில் ரீல்ஸாகப் படம்பிடித்துள்ளார். அப்படிப் பாடம் எடுக்கும் வேளையில், அந்த ஆசிரியை அவ்வப்போது லேசாகப் புன்னகைத்தபடி கேமராவைப் பார்த்ததால், பாடம் கவனிப்பதை விட்டுவிட்டு மாணவர்களின் கவனம் ஆசிரியையின் சிரிப்பின் பக்கம் சென்றுள்ளது.
ஆசிரியை எவ்வளவு எடுத்துக்கூறியும் மாணவர்களால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் வகுப்பறையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் கோபமடைந்த ஆசிரியை, பாடப் புத்தகங்களை எடுத்துக்கொண்டு வகுப்பை விட்டே வெளியேறியுள்ளார். வகுப்பறையில் ரீல்ஸ் மோகம் அதிகரிப்பதும், கனிவான கல்விச் சூழல் இல்லாததும் மாணவர்களின் படிப்பைப் பாதிப்பதாக இணையவாசிகள் இச்சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
