அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலம் மிடில் டவுன்ஷிப் தொடக்கப் பள்ளியின் முன்னாள் ஐந்தாம் வகுப்பு ஆசிரியரான லாரா கரோன் (36), 11 வயது சிறுவனுடன் சட்டவிரோத பாலியல் உறவில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 11 வயதாக இருந்தபோதே அவரை இந்த ஆசிரியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தத் தொடங்கியுள்ளதாகப் புலனாய்வாளர்கள் விசாரணையில் கண்டறிந்துள்ளனர். கேப் மே கவுண்டி வழக்கறிஞர் அலுவலகம் நடத்திய தீவிர விசாரணையைத் தொடர்ந்து, அவர் மீது கடந்த 2025-ஆம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 13 வயதாகவும், ஆசிரியை கரோனுக்கு 27 வயதாகவும் இருந்தபோது, 2019-ஆம் ஆண்டில் கரோன் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததாகக் கூறப்படுகிறது. சிறுவனின் பெற்றோரின் அனுமதியுடன் கரோனின் வீட்டிற்குச் சென்று தங்கியிருந்த அந்த மாணவன்தான் அந்தக் குழந்தையின் தந்தை என்ற உண்மையைச் சிறுவனின் சகோதரி புலனாய்வாளர்களிடம் தெரிவித்தார். முறையான காரணங்கள் ஏதுமின்றி கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் அந்த ஆசிரியருடன் மாணவர் சேர்ந்து வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது இந்த வழக்கில் லாரா கரோன் தனது குற்றத்தை நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளார். இதன் காரணமாக அவருக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படுவதோடு, அவரது ஆசிரியர் உரிமம் மற்றும் எதிர்கால அரசுப் பணிகள் அனைத்தும் பறிக்கப்பட உள்ளன. மேலும், சிறைத் தண்டனைக்குப் பிறகு வாழ்நாள் முழுவதும் பரோல் மேற்பார்வையின் கீழ் இருக்க வேண்டும் என்றும், குற்றவாளிகள் பதிவேட்டில் இவரது பெயர் சேர்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி இவருக்கு இறுதித் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
