கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலா பகுதியில் உள்ள ஆயுரூர் இடவ ஸ்ரீ வனமூர்த்தி பத்ரா தேவி கோயிலில் ராஜேஷ் என்பவர் பூசாரியாகப் பணியாற்றி வந்துள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரின் உடல்நலக்குறைவு காரணமாக இந்தக் கோயிலுக்குச் சென்றுள்ளார். அப்போது ராஜேஷ், பெண்ணின் கணவர் உடலில் பேய் இருப்பதாகவும், அதை விரட்டச் சிறப்புச் சடங்குகள் செய்ய வேண்டும் என்றும் நம்ப வைத்துள்ளார்.
சடங்குகள் செய்வதாகக் கூறி அப்பெண்ணைத் தனிமைப்படுத்திய ராஜேஷ், அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இந்தச் சம்பவத்தை வெளியே கூறினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனப் பலமுறை மிரட்டித் தொடர் துன்புறுத்தலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். பூசாரியின் மிரட்டலால் மனமுடைந்த அந்தப் பெண், கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காவல்துறையில் துணிச்சலுடன் புகார் அளித்தார். இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷைக் கைது செய்தனர்.
பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஏ. ஷாஜஹான், குற்றவாளியான ராஜேசுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். மேலும், அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
