தஞ்சாவூரில் 16 வயது பள்ளி மாணவியிடம் வீடியோ அழைப்பில் ஆபாசமாகப் பேசிய ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் சண்முகசுந்தரராஜ் (61) மற்றும் அதற்கு உடந்தையாகச் செயல்பட்ட தனியார் பள்ளி ஆசிரியை திவ்யா (38) ஆகிய இருவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் ஈஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்த திவ்யா, தனது வீட்டில் மாணவிகளுக்கு டியூஷன் நடத்தி வந்த நிலையில், அங்கு படித்த மாணவியை தனது கைபேசி மூலம் சண்முகசுந்தரராஜிடம் பேச வைத்துள்ளார். ஆரம்பத்தில் சாதாரண பேச்சாகத் தொடங்கி, பின்னர் சண்முகசுந்தரராஜ் வீடியோ அழைப்பில் அம்மாணவியிடம் அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமாகப் பேசத் தொடங்கியுள்ளார்.
இதற்கு டியூஷன் ஆசிரியை திவ்யாவும் துணையாக இருந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான அம்மாணவி, தான் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் சென்று இதுகுறித்து அழுது புலம்பியுள்ளார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட தலைமையாசிரியர், தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், மாணவியிடம் ஆபாசமாகப் பேசிய ஓய்வுபெற்ற ஆசிரியர் சண்முகசுந்தரராஜ் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த டியூஷன் ஆசிரியை திவ்யா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
