இன்றைய நவீனச் சூழலில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சில சமூக விரோதிகள் தங்களின் சொந்த லாபத்திற்காகவும், பணம் சம்பாதிக்கும் பேராசையினாலும் மாணவர்களைக் குறிவைத்துச் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் மாணவர்களைப் போதைப்பொருள் பயன்படுத்த மறைமுக இடங்களில் அனுமதிப்பதை ஒரு வியாபாரமாகவே செய்து வருகின்றனர். இத்தகைய அவல நிலை திருப்பத்தூர் நகர பேருந்து நிலையப் பகுதியில் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அங்கு செயல்பட்டு வரும் ஒரு டீக்கடையின் பின்புறத்தில் உள்ள ஷட்டர் வழியாகப் பள்ளி மாணவர்கள் அடிக்கடி வெளியே சென்று, நகராட்சிக்குச் சொந்தமான காலி இடத்தில் அமர்ந்து கஞ்சா மற்றும் சிகரெட் போன்ற தவறான பழக்கங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். மாணவர்கள் எளிதாக அந்த இடத்திற்குச் சென்று போதைக்கு அடிமையாகி வருவது அப்பகுதி வழக்கமாக இருந்துள்ளது. இதனால் வேதனையடைந்த அப்பகுதி பொதுமக்கள் டீக்கடை உரிமையாளரிடம் பலமுறை புகார் அளித்தும், சுயலாபத்திற்காக அந்தப் பின்புற ஷட்டர் மூடப்படாமல் திறந்தே வைக்கப்பட்டு வந்ததால் பொதுமக்களிடையே கடும் அதிருப்தி நிலவியது.
இந்நிலையில், இன்று அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அச்சுதன் என்பவர் நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார். அங்கு போதைப்பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த பள்ளி மாணவர்களைச் சந்தித்துப் பேசிய அவர், இந்தத் தவறான பழக்கவழக்கங்களால் வாழ்க்கையிலும் ஆரோக்கியத்திலும் ஏற்படும் பாதிப்புகளைப் பொறுமையுடன் விளக்கி அறிவுரை வழங்கி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தார். தொடர்ந்து, டீக்கடை உரிமையாளரிடமும் நேரில் கடுமையாகப் பேசிய சமூக ஆர்வலர், இனிமேல் பின்புற ஷட்டரைத் திறந்து வைத்து மாணவர்கள் தவறான பாதைக்குச் செல்லும் சூழலை உருவாக்கக்கூடாது என்றும், உடனடியாக அதை மூடி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதன் விளைவாக, தற்போது சம்பந்தப்பட்ட டீக்கடையின் பின்புற ஷட்டர் உடனடியாக மூடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால நலனை உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட கல்வி மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாணவர்களைத் தவறான பாதைக்கு ஊக்குவித்த டீக்கடை உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
