ஆந்திர மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட சந்தேகத்தால், இளம்பெண் ஒருவர் அவரது காதலனாலேயே நடுரோட்டில் குத்திப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் கனுபர்த்திபாடு கிராமத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ரேவதி என்பவருக்கு, கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு சுமன் என்பவருடன் திருமணம் ஆகியுள்ளது. இந்தத் தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ரேவதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவனை பிரிந்து, தன் குழந்தைகளுடன் தந்தை வீட்டிற்கு வந்துவிட்டார். குடும்ப சூழ்நிலை காரணமாக அருகில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்த ரேவதிக்கு, அங்கு ஸ்ரீகாந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இந்த பழக்கம் இருவருக்குள்ளும் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இருவரும் நெருங்கிப் பழகி வந்த நிலையில், ரேவதி சமீபகாலமாக அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் ரேவதியின் நடத்தையில் ஸ்ரீகாந்திற்கு சந்தேகம் எழுந்துள்ளது. “என்னைத் தவிர்த்துவிட்டு வேறு யாருடன் பேசுகிறாய்?” என்று ஸ்ரீகாந்த் அடிக்கடி ரேவதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததால், மனமுடைந்த ரேவதி கடந்த சில நாட்களாக ஸ்ரீகாந்துடன் பேசுவதையும் பழகுவதையும் முற்றிலும் தவிர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மே 9-ஆம் தேதி மதியம், காவலாளியாக வேலை பார்க்கும் தனது தந்தைக்கு ரேவதி உணவு கொடுக்கச் சென்றுள்ளார். பின்னர், தனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் போடுவதற்காகச் சென்றபோது, வழியில் ஸ்ரீகாந்த் அவரை வழிமறித்து மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரத்தின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற ஸ்ரீகாந்த், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரேவதியின் மார்பில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரேவதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரேவதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ஸ்ரீகாந்தைத் தீவிரமாகத் தேடி வரும் போலீசார், இக்கொலைச் சம்பவத்திற்கு ஸ்ரீகாந்தின் தாயாரும் உடந்தையாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
