இனி பேப்பர் ரசீது செல்லாது…. டாஸ்மாக் கடைகளில் வரப்போகும் மிகப்பெரிய டிஜிட்டல் மாற்றம்… மதுபிரியர்களுக்கு தமிழக அரசு வைத்த செக்….!

By Nanthini on புரட்டாதி 7, 2026

Spread the love

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கொள்முதல் செய்யும் நடைமுறையில் மிகப்பெரிய மாற்றத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. இது நாள் வரை காகிதப் படிவங்கள் (Paper Forms) மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்த கொள்முதல் முறை முற்றிலும் ரத்து செய்யப்பட்டு, வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் கையடக்கக் கருவிகள் வாயிலாக மட்டுமே சரக்கு கோரிக்கை பதிவேற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் மதுபானங்கள் மட்டுமே விற்பனைக்கு வருவதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, அனைத்து பிராண்டுகளின் மதுபானங்களும் சீரான முறையில் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தானியங்கி முறையின் கீழ், ஒவ்வொரு கடைக்கும் தேவையான மதுபானங்களின் அளவு, அந்தக் கடையின் முந்தைய விற்பனைப் பதிவுகளைக் கொண்டு கணினி மூலமாகவே தானாகவே உருவாக்கப்படும். முதல் முறை மட்டுமே கடை மேற்பார்வையாளரின் கோரிக்கை கணக்கில் கொள்ளப்படும். தேவைப்படும் பிராண்ட், பாட்டில் அளவு மற்றும் எண்ணிக்கையை அதிகபட்சமாக 120 சதவீதம் வரை மேற்பார்வையாளர் அதிகரிக்க முடியும் என்றாலும், நிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் குறைக்க முடியாது. இதனால் வாடிக்கையாளர்கள் விரும்பும் பிராண்டுகள் எவ்வித தடையுமின்றி கிடைக்கப் பெறுவது உறுதி செய்யப்படும்.

   

இந்த டிஜிட்டல் மாற்றத்தில் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மேற்பார்வையாளர் தனது செல்போன் எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல் (OTP) மூலம் சரிபார்த்த பின்னரே கோரிக்கையை இறுதி செய்ய முடியும். மேலும், இரண்டாம் கட்ட கொள்முதல் கோரிக்கையிலிருந்து மாவட்ட மேலாளரின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டிய அவசியமின்றி, கணினியே தானியங்கி முறையில் அனுமதி வழங்கிவிடும். கையடக்கக் கருவியிலேயே அச்சு நகலை எடுத்து வைத்துக்கொள்ளலாம் என்பதால், டெப்போக்களுக்கு நேரடியாக அச்சு நகலை எடுத்துச் செல்ல வேண்டிய தேவையும் இனி இருக்காது.

   

தமிழகத்தில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் இயங்கி வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது. பொங்கல், தீபாவளி மற்றும் புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் விற்பனை பல மடங்கு உயர்ந்து, தீபாவளி சமயத்தில் மட்டும் ரூ.750 கோடியைத் தாண்டி சாதனை படைப்பது வழக்கமாகும். இத்தகைய சூழலில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த நவீன கொள்முதல் நடைமுறை, முறைகேடுகளைத் தடுத்து டாஸ்மாக் நிர்வாகத்தை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதோடு, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.