சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி வளாகத்தில், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் சாலையோர உணவு விற்பனையாளர்களுக்கான பயிற்சி மற்றும் மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ், ஐந்து பேருக்கு இலவச உணவு வண்டிகளை வழங்கி திட்டத்தைத் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாலையோர உணவு வியாபாரிகளின் தரத்தை உயர்த்தவும், அவர்களுக்குச் சீரான பிராண்ட் அடையாளத்தை உருவாக்கவும் முதற்கட்டமாக 6 மாவட்டங்களில் ‘உணவு வீதி’ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், உணவில் தடைசெய்யப்பட்ட ரசாயன கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
இன்று திரைக்கு வந்த விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் இந்த அரசு நிகழ்ச்சிக்கு ஏற்கனவே வருவதாக உறுதியளித்திருந்தேன். எனவே, கடமையை முன்னிறுத்தி ஜனநாயகன் திரைப்படத்தை முழுமையாகப் பார்க்க முடியாமல் பாதியிலேயே வந்துவிட்டேன்” என அமைச்சர் அருண் ராஜ் விளக்கமளித்தார். அதேபோல, மாட்டுக்கறி ஸ்டால் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாராவது தடுத்தால், அவர்கள் எந்த அமைப்பாக இருந்தாலும் அரசு சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
