இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் சென்சார் சிக்கல்களுக்குப் பிறகு திரைக்கு வந்துள்ளது. முன்னதாக, இப்படத்தின் டிரெய்லரில் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் அமீர் விமர்சித்திருந்தார். இதற்கு விளக்கமளித்த எச்.வினோத், படத்தில் அப்படி எதையும் காண்பிக்கவில்லை என்றும், முழுத் திரைப்படத்தைப் பார்த்துவிட்டுத் கருத்து தெரிவிக்குமாறும் அமீருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த அமீர், டெல்லியில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி ரத்தம் சிந்தி வரும் இந்தச் சூழலில் திரைப்படம் பார்க்கத் தனக்கு விருப்பமில்லை எனக் குறிப்பிட்டார். அமீரின் இந்த கூற்றிற்கு மீண்டும் பதிலளித்த இயக்குநர் எச்.வினோத், ‘ஜனநாயகன்’ திரைப்படமும் சினிமா வடிவில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு போராட்டமே என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
