டி.ராஜேந்தர் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்தவர். அவரது அடுக்குமொழி வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை. சிறந்த பேச்சுத்திறமை கொண்ட டி.ராஜேந்தர் மனதில் பட்டதை பொதுவெளியாக இருந்தாலும் வெளிப்படையாகப் பேசிவிடுவார். ஆதலால் சில நேரங்களில் அவர் பேசியது சர்ச்சையை உண்டு செய்துவிடும்.
ஒரு தலை ராகம் என்ற படம் மூலமாக அறிமுகம் ஆன டி ராஜேந்தர் அடுத்தடுத்து ஹிட் படங்களாகக் கொடுத்து முன்னணி இயக்குனர் ஆனார்.தொடக்கத்தில் திரைப்படங்களை இயக்கி, பாடல்கள் எழுதி, இசையமைத்து, ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்கத்தை மேற்கொண்ட அவர் உயிருள்ளவரை உஷா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தொடர்ந்து தன் படங்களில் தானே கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.
டி ஆர் எப்படி பன்முகத்திறமை கொண்ட கலைஞராக விளங்கினாரோ, அதுபோலவே அவர் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவராகவும் இருந்தார். எளிதாக கோபப்படுவது முதல் மிகச்சிறிய விஷயத்துக்குக் கூட எமோஷனல் ஆகி அழுவது வரை மேடையிலேயே அவரை அப்படிப் பல தருணங்களில் நாம் பார்த்துள்ளோம்.
அப்படி ஒரு சம்பவத்தை கமல்ஹாசன் ஒரு நிகழ்ச்சியில் சிம்புவோடு அவர் கலந்துகொண்ட பேசியுள்ளார். அந்த மேடையில் “சிம்புவின் நல்ல குணத்தை எல்லோரும் பாராட்டுகிறார்கள். இது எங்கிருந்து வந்திருக்கும் என எனக்குத் தெரியும். அது அவருடைய தந்தையிடம் இருந்து வந்திருக்கும்.
பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் ஒருமுறை ‘இனிமேல் நடிப்பதை நிறுத்தி விடலாமா’ என யோசிக்கிறேன் எனக் கூறிவிட்டேன். அதைக் கேள்விப்பட்டு என் வீட்டுக்கு வந்த டி ஆர், என்னைக் கட்டிப்பிடித்து அழுக ஆரம்பித்துவிட்டார். எந்தளவுக்கு அழுதார் என்றால் அவர் கண்ணீரால் என் சட்டையே நனையும் அளவுக்கு அழுதார். என்னிடம் “நீங்கள் எல்லாம் இப்படி ஒரு வார்த்தையை சொல்லக் கூடாது. நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் நடிக்கவேண்டும்” என சொல்லிவிட்டு சென்றார்.
நான் இன்று இங்கிருப்பதற்கு டி ராஜேந்தரும் ஒரு காரணம். இதை நான் சொன்னேன் என உங்கள் தந்தையிடம் (சிம்புவை கைகாட்டி) சொல்லுங்கள்” எனப் பேசியுள்ளார்.