தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் 10-ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியேறிய மாணவி மாயமான நிலையில், மறுநாள் காலை காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் (39) என்பவரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தத் துயரமான சூழலில், நடிகர் மற்றும் அரசியல் விமர்சகருமான எஸ்.வி.சேகர் இந்தச் சம்பவம் குறித்துத் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன. திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், பாலியல் குற்றவாளிகளை உடனடியாக என்கவுண்டர் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், நாட்டில் அதிகப்படியான பாலியல் குற்றங்கள் பாஜக ஆளும் மாநிலங்களில்தான் நடப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், காவல்துறை அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு வழங்க முடியாது என்றும் தெரிவித்தார்.
இருப்பினும், உயிரிழந்த மாணவி குறித்து அவர் பேசிய விதம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “விளாத்திகுளம் மாணவி புதருக்கு பின்னால் இருந்தார் எனச் சொல்கிறார்கள்; அவர் ஏன் புதருக்குச் செல்ல வேண்டும்? காவல்துறை சாலையில் தான் விளக்குப் போட முடியும், புதருக்குள்ளா போட முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு மாணவி கொடூரமான முறையில் கொல்லப்பட்ட நிகழ்வில், பாதிக்கப்பட்ட தரப்பின் மீதே கேள்வி எழுப்பும் வகையில் அமைந்த இவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
திமுக கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யப் போவதாகத் தெரிவித்த எஸ்.வி.சேகர், தமிழகம் சிறந்து விளங்க திமுகவிற்கே வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால், ஒருபுறம் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறிக்கொண்டே, மறுபுறம் பாதிக்கப்பட்ட பெண் ஏன் அங்கு சென்றார் எனச் சர்ச்சையாகப் பேசியிருப்பது நெட்டிசன்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவியின் மரணத்தில் அரசியல் கலப்பதையும், பெண்ணின் நடத்தையைச் மறைமுகமாகச் சிதரிப்பதையும் தவிர்க்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
