அதிமுக கூட்டணியில் நீடித்து வந்த புரட்சி பாரதம் கட்சி, தற்போது தொகுதி பங்கீட்டில் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக வெளியேறும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கே.வி.குப்பம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பூவை ஜெகன்மூர்த்தி, இம்முறை தனது கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்படும் என பெரிதும் நம்பியிருந்தார். ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பட்டியலில் மீண்டும் அதே ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது அக்கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படையாகப் பதிவு செய்துள்ள பூவை ஜெகன்மூர்த்தி, “நாங்கள் 6 தொகுதிகள் வரை கேட்டு, இறுதியாக 3 தொகுதிகளாவது கிடைக்கும் என எதிர்பார்த்தோம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதியை நம்பி கடுமையாக உழைத்தோம். ஆனால், தற்போது நாங்கள் ஏமாற்றப்பட்டோமா அல்லது ஏமாந்தோம் என்று தெரியவில்லை; இந்த முடிவு எங்களுக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது” என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலில் திமுக வேட்பாளரை விட 10,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அதிமுக கூட்டணியின் விசுவாசமான அங்கமாக இருந்த தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதே புரட்சி பாரதம் கட்சியின் முக்கிய புகாராக உள்ளது. மற்ற கட்சிகள் கூட்டணியை விட்டு வெளியேறிய போதும், உணர்வுப்பூர்வமாக அதிமுகவுடன் நின்ற தங்களை எடப்பாடி பழனிசாமி தரப்பு கண்டுகொள்ளவில்லை என அக்கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் கொந்தளிப்பில் உள்ளனர்.
தற்போது நிலவும் இந்த பரபரப்பான சூழலில், பூவை ஜெகன்மூர்த்தி இன்று தனது கட்சியின் உயர்மட்ட நிர்வாகக் குழுவைக் கூட்டி அவசர ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. ஏற்கனவே திமுக கூட்டணியில் சில சலசலப்புகள் நிலவி வரும் வேளையில், அதிமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள இந்த விரிசல் தமிழக தேர்தல் களத்தில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
