தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா. முதலில் நேருக்கு நேர் திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து சூர்யா நடித்திருந்த நிலையில் அந்தத் திரைப்படம் சரியாக போகாததால் பாலா இயக்கத்தில் வெளியான நந்தா திரைப்படத்தில் சூர்யா நடித்தார். இந்தத் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த நிலையில் சூரியாவுக்கு தமிழ் சினிமாவில் தனி ஒரு அங்கீகாரம் கிடைத்தது. ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் நடித்த காக்க காக்க உள்ளிட்ட படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஒரு பக்கம் கமர்சியல் பாதையிலும் மறுபக்கம் நடிப்புக்கு தீனி போடும் கதைகளிலும் நடித்து வந்தார்.
கோலிவுட்டின் நல்ல நடிகர்களில் சூர்யாவும் ஒருவர் என்று அனைவரும் சொல்லும் அளவுக்கு பேச வைத்தார். இப்படி தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்த சூர்யாவுக்கு கடந்த சில வருடங்களாக சரியான ஹிட் படங்கள் எதுவும் அமையவில்லை. அவருடைய நடிப்பில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இறுதியாக வெளியான கங்குவா மற்றும் எதற்கும் துணிந்தவன் என்ற இரண்டு திரைப்படங்களுமே தோல்வியை தழுவியது. தற்போது சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அதனைப் போலவே ஆர் ஜே பாலாஜி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வரும் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் நடிக்க உள்ளார்.
அதனால் அடுத்தடுத்து வெளியாக உள்ள சூர்யா படங்கள் மீது ரசிகர்கள் பெரிய நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் வைத்துள்ளனர். சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் பல நல்ல விஷயங்களை செய்து வரும் சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலம் ஏராளமான ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வருகின்றார். பல வருடங்களாக இந்த சேவையை சூர்யா தொடர்ந்து செய்து வரும் நிலையில் சென்னையில் அகரம் நிறுவனத்திற்கான புதிய அலுவலகம் ஒன்று நேற்று திறக்கப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசிய சூர்யா, கஜினி திரைப்படத்தை முடித்த பிறகு 2006 ஆம் ஆண்டு மக்கள் எனக்கு கொடுத்த அன்பை ஏதாவது ஒரு வகையில் அவர்களுக்கு திருப்பி வழங்க வேண்டும் என்று நான் நினைத்தேன். அந்த விதை தான் இன்று ஆலமரமாக வளர்ந்து உள்ளது.
பொருளாதார நெருக்கடியால் முதல் தலைமுறை மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி விடுகிறது என இயக்குனர் ஞானவேல் சொன்னது தான் அகரம் தொடங்குவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. முதலில் அகரத்தை பத்துக்கு பத்து அறையில் தான் தொடங்கினோம். அதன் பிறகு இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் பணிகள் நடந்தது. பின்னர் என்னுடைய தந்தை சிவக்குமார் ஒரு இடத்தை கொடுத்தார். அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு விதை என்ற திட்டத்தை தொடங்கி அரசு பள்ளிகளில் படித்து முடித்த மாணவர்கள் மற்றும் மாணவிகளை கல்லூரியில் சேர்க்கும் பணிகள் நடந்தது.
அவர்கள் அத்தனை பேரும் முதல் தலைமுறை மாணவர்கள். அகரம் இன்னும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. தற்போது அலுவலகம் கட்டப்பட்டுள்ள இடம் படிப்புக்காக வந்த நன்கொடையால் வாங்கிய இடம் கிடையாது. எனக்கு கிடைத்த என்னுடைய சொந்த வருமானத்தில் கட்டப்பட்ட இடம். நன்கொடையாக வரக்கூடிய ஒவ்வொரு ரூபாயும் படிப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. இது அறிவை பகிரும் இடமாக இருப்பது மட்டுமல்லாமல் எனக்கு இதுதான் தாய் வீடு போன்றது. சொந்த வீடு கட்டிய போது வந்த சந்தோஷத்தை விட அகரம் புதிய அலுவலக திறப்பு நாளில் வந்த சந்தோசம் அதிகமாக உள்ளது என சூர்யா எமோஷனலாக பேசியுள்ளார்.