ஆர். சுந்தர்ராஜன், டைரக்டர் மற்றும் நடிகராக தமிழ் சினிமாவில் 80 களில் பல ஹிட் படங்களைக் கொடுத்தவர். இயக்குனர் பாக்யராஜும் இவரும் கல்லூரி தோழர்கள். பயணங்கள் முடிவதில்லை என்ற சில்வர் ஜூப்ளி திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார் சுந்தர்ராஜன்.
அதன் பின்னர் வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, பயணங்கள் முடிவதில்லை, நான் பாடும் பாடல், குங்குமச்சிமிழ், ராஜாதி ராஜா போன்ற படங்களை இயக்கி தன்னை முன்னணி இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்டார். அதுமட்டுமின்றி பல படங்களில் ஆர் சுந்தர்ராஜன் நடித்திருக்கிறார். அமைதிப்படை, சூர்யா வம்சம், தசாவதாரம், நட்புக்காக, ஜானகிராமன், லிங்கா என பல படங்களில் அப்பா, அண்ணன், தாத்தா கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.
இவர் இயக்குனர் பாக்யராஜின் பள்ளித் தோழன். இவரும் பாக்யராஜும் சேர்ந்து மேடை நாடகங்கள் போட்டுள்ளனர். ஆனால் அதன் பின்னர் பாக்யராஜ் சினிமாவுக்கு வந்து இயக்குனர் ஆகி முன்னணி நடிகராகவும் ஆகிவிட்டார். அவரைப் போல தானும் இயக்குனர் ஆகவேண்டுமென்ற ஆசையோடு சுந்தர்ராஜன் சென்னைக்கு வந்து பாக்யராஜைப் பார்த்துள்ளார்.
அவரின் பயணங்கள் முடிவதில்லை திரைப்படம் வெள்ளிவிழா காண, தொடர்ந்து 80 களில் பல வெள்ளி விழாப் படங்களை இயக்கி முன்னணி இயக்குனரானார். ஆனால் 90 களில் அவர் தனக்கான மார்க்கெட்டை இழந்து நடிகராக தன்னுடைய ரூட்டை மாற்றிக்கொண்டார். இப்போது நடிகராகவும் அவருக்குப் பெரிய வாய்ப்புகள் இல்லை.
இதுபற்றி பேசியுள்ள அவர் “நாங்கள் எல்லாம் பழைய இயக்குனர்கள் ஆகிவிட்டோம். எங்களுக்கு முன்னால் வந்த நடிகர்களான ரஜினி, கமல் எல்லாம் இன்னும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். பாக்யராஜெல்லாம் இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னன் என பாராட்டப்பட்டவர். நாங்களாவது பரவாயில்லை இளையராஜா இசையை வச்சு ஓட்டுனோம். விக்ரமன் எல்லாம் அது கூட இல்லாம ஹிட்டாக்கினார். அவரை எல்லாம் கைவிடக் கூடாது. பழைய இயக்குனர்களை எல்லாம் டிஷ்கஷனிலாவது உட்காரவைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.