கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டுத் திடலைச் சமன்படுத்துவதற்காக, அருகில் உள்ள மலப்பம்பாடி ஏரியிலிருந்து சட்டவிரோதமாக மண் எடுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அரசுக்கு ரூபாய் 8 கோடி இழப்பு ஏற்பட்டதாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் எ.வ.குமரன் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
தம் மீதான இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் எ.வ.குமரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். மேலும், இந்த ரத்து மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு இருவர் தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
மனுக்களை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், வழக்கை ரத்து செய்யக் கோரும் மனுவை முறைப்படி எண்ணிட்டு விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்டார். இதன் காரணமாக, எ.வ.வேலு மற்றும் அவரது மகன் தொடர்ந்த இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
