கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கல்வித்துறை பயிற்சியாளராக பணியாற்றி வரும் ஜெயராம் என்பவர், தனது பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுக்குப் பல ஆண்டுகளாகப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதன் உச்சக்கட்டமாக, அந்தப் பெண்ணின் 15 வயது மகளிடமும் அவர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். தனது ஆசைக்கு இணங்க மறுத்தால், அந்தச் சிறுமியையும் அவளது சகோதரனையும் பள்ளியில் பொதுத்தேர்வு எழுத விடாமல் தடுத்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்து தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்.
இந்தத் தொடர் மிரட்டல்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்தச் சிறுமி, நடந்த விவரங்களை தன்னிடம் பெற்றோரிடம் துணிச்சலாகக் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஜெயராம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மாணவர்களின் நலனைக் காக்க வேண்டிய கல்வித்துறை பயிற்சியாளரே இவ்வாறு நடந்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
