தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநில அரசியல் களம் தினமும் ஒரு பரபரப்புடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு திமுக கூட்டணியில் அங்கம் வகித்த மதிமுக, விசிக, காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் தற்போது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான புதிய கூட்டணியில் இணைந்துள்ளன. மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்கி வரும் நிலையில், இந்தக் கூட்டணியின் முதல் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் விஜய், வைகோ, திருமாவளவன், மாணிக்கம் தாகூர் மற்றும் காதர் மொய்தீன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்று அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விவாதித்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணிக்கான பெயர் மற்றும் அதன் ஒருங்கிணைப்பாளரைத் தேர்ந்தெடுப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. ‘தமிழக வெற்றிக்கான சமூகநீதி கூட்டணி’ உள்ளிட்ட சில பெயர்கள் பரிசீலனையில் இருந்தாலும், இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. அதே வேளையில், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக யாரை நியமிப்பது என்பதில் கட்சித் தலைவர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படாதது விஜய்க்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. அரசியல் அனுபவத்தில் மிகவும் மூத்தவரான மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை இந்த பதவிக்கு நியமிக்க வேண்டும் என்று அவரது கட்சியினர் விரும்புகின்றனர்.
மறுபுறம், சமூகநீதிக் கொள்கையை முன்னிறுத்தும் விதமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை ஒருங்கிணைப்பாளராக நியமிக்க வேண்டும் என ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். வைகோ, திருமாவளவன் ஆகிய இருவருமே பழுத்த அரசியல் அனுபவம் கொண்டவர்கள் என்பதால், இதில் யாரைத் தேர்வு செய்வது என்ற இக்கட்டான சூழ்நிலையில் விஜய் இருக்கிறார். விரைவில் வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களை எதிர்கொள்ள தவெக வியூகம் வகுத்து வரும் நிலையில், அடுத்த கூட்டத்தில் இந்தக் கூட்டணியின் பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
