தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும், தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்து நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்தது. இந்த நிலையில், தவெக ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக பரஸ்பர குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இதன் உச்சகட்டமாக, தவெக எம்.எல்.ஏ.க்களை ரூ.35 கோடி வரை பேரம் பேசி இழுக்க முயற்சி நடந்ததாக காவல்துறை வெளியிட்ட அறிக்கை தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தவெக எம்.எல்.ஏ. இளையராஜா அளித்த புகாரின் பேரில், கடந்த சில நாட்களில் திருநாவுக்கரசர் உள்ளிட்ட 9 பேரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இந்த ஆட்சி கவிழ்ப்பு சதியின் பின்னணியில் திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறையின் முதற்கட்ட தகவல்களின்படி, சென்னை கிழக்கு கடற்கரை சாலை (ECR) மற்றும் கிண்டியில் உள்ள சொகுசு நட்சத்திர ஓட்டல்களில் இதற்கான ரகசிய ஆலோசனை கூட்டங்கள் அரங்கேறியுள்ளன. கரூர் மற்றும் திருச்சியைச் சேர்ந்த திமுக பிரமுகர்கள் இந்த ஓட்டல்களில் சந்தித்து, தவெக எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.35 கோடி வரை பணம் கொடுத்து சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு திரட்ட திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த பேரத்திற்கு அதிமுக மற்றும் சில அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் உதவியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாரை கைது செய்ய காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. கரூரில் உள்ள அவரது இல்லம் மற்றும் பல்வேறு முக்கிய இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தியும் இருவரும் சிக்காததால், அவர்கள் அண்டை மாநிலங்களுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
