தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸுக்கு மாற்றாக 3-வது அணியை அமைக்கும் முயற்சியில் திமுக களம் இறங்கியுள்ளதாக வெளியாகும் தகவல்கள் இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ‘இண்டியா’ கூட்டணியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் காங்கிரஸின் சில முடிவுகளால் அதிருப்தியில் உள்ள மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்க திமுக தலைமை காய்களை நகர்த்தி வருகிறது. இதன் முதற்கட்டமாக, திமுக எம்பி கனிமொழி மும்பையில் உள்ள ‘மாதோஸ்ரீ’ இல்லத்திற்குச் சென்று சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரேவை நேரில் சந்தித்துப் பேசியுள்ளது இந்த யூகங்களுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது.
தொகுதி மறுவரையறை மற்றும் மாநிலக் கட்சிகளின் அதிகாரப் பகிர்வு குறித்து விவாதிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப் பட்டாலும், தேசிய அளவிலான புதிய கூட்டணிக்கான அஸ்திவாரமாகவே இச்சந்திப்பு பார்க்கப்படுகிறது. முந்தைய காலங்களில் உருவான 3-வது அணிகள் நிலையற்றதாகவே இருந்த போதிலும், அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே போன்ற சக்திவாய்ந்த பிராந்திய தலைவர்களின் ஆதரவு கிடைத்தால் மு.க. ஸ்டாலினின் இந்த முயற்சி தேசிய அரசியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்; இருப்பினும், மாநில அளவிலான தலைவர்களின் மாறுபட்ட கொள்கை முரண்பாடுகளைக் கடந்து இந்த அணியை வலுவாகக் கட்டமைப்பதே இதன் வெற்றிக்கு முக்கய சவாலாக அமையும்.
