தஞ்சாவூர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தவெக அரசின் நிர்வாக சீர்கேடுகள், காவிரி நீர் உரிமையில் ஏற்பட்ட தோல்வி மற்றும் மேகதாது அணை பிரச்சினையில் நிலவும் மெத்தன போக்கை பற்றி மட்டுமே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், கேபினெட் அந்தஸ்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பதைத் தடுக்கவும், அரசின் தோல்விகளைத் திசைதிருப்பவுமே உதயநிதி ஆபாசமாகப் பேசியதாகப் பொய் பிரச்சாரம் செய்து அராஜகமாகக் கைது செய்யப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
உதயநிதி ஸ்டாலினை உடனடியாக விடுதலை செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, தவெக அரசின் பாசிச ஆட்சி முறைக்கு விழுந்த பலத்த அடியாகும் என்று ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். ஆட்சியில் அமர்ந்தது முதல் விமர்சிப்பவர்களைக் கைது செய்வதையே வேலையாகக் கொண்டிருக்கும் முதலமைச்சர் விஜய், ரீல்ஸ் உருவாக்குவதைத் தவிர்த்துத் தனது கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும், போராட்டத்தில் கைதான திமுகவினரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், தொடர்ச்சியான ஆணவம் தவெக அரசின் அழிவை விரைவுபடுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.
