சென்னை மணலியைச் சேர்ந்த கணேஷ் பாபு என்பவரது கொடுங்கையூர் ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றும் அனுராஜ் (54), தளபதி (60) மற்றும் விஜயகுமார் (43) ஆகிய மூவரும் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது போதையில் அனுராஜுக்கும் தளபதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தளபதியை அடித்துவிட்டு அனுராஜ் மொட்டை மாடிக்குச் செல்லவே, ஆத்திரமடைந்த தளபதியும் விஜயகுமாரும் அவரைப் பின்தொடர்ந்து சென்று அங்கிருந்த கட்டை மற்றும் செங்கற்களால் அனுராஜின் தலை மற்றும் முகத்தில் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அனுராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மறுநாள் நிறுவனத்திற்கு வந்த உரிமையாளர் கணேஷ் பாபு, மொட்டை மாடியில் அனுராஜ் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கொடுங்கையூர் போலீசாருக்குத் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய தளபதி மற்றும் விஜயகுமாரை உடனடியாகக் கைது செய்த போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில் மதுபோதை மோதலே கொலைக்குக் காரணம் என்பதை உறுதி செய்தனர். இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலிஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களைச் சிறையில் அடைத்தனர்.
