தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பிரசாரத்தை எட்டியுள்ள நிலையில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS) இடையிலான வார்த்தை போர் தீவிரமடைந்துள்ளது. காரில் செல்லும்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைப் பார்ப்பதாக முதலமைச்சர் மீது எடப்பாடி பழனிசாமி அண்மையில் விமர்சனம் முன்வைத்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய முதலமைச்சர், “காரில் போகும்போது கிரிக்கெட் பார்த்தது தப்பு என பழனிசாமி சொல்லிருக்காரு.. காரில் நீங்க கர்ச்சீப் வைத்து முகத்தை மூடிட்டு போனீங்களே.. அதுதான் கேவலம்” என கடுமையாகச் சாடியுள்ளார்.
இந்த காரசாரமான விவாதம் கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில், தற்போதைய திமுக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். அதேவேளையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுங்கட்சிக்கு எதிராகத் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இரு தலைவர்களுக்கும் இடையிலான இந்த நேரடி மோதல், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
