நேற்று (ஏப்.18) நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ஹைதராபாத் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. இப்போட்டியில் சென்னை அணியின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களைக் குவித்துக் கொண்டிருந்தார். சிஎஸ்கே ரசிகர்களுக்கு நம்பிக்கையளித்த மாத்ரேவுக்கு, ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் திடீரென தசைப்பிடிப்பு (Cramp) ஏற்பட்டது. இதனால் அவரால் களத்தில் சரியாக ஓட முடியாமல் போனதுடன், அடுத்த சில பந்துகளிலேயே தனது விக்கெட்டையும் பறிகொடுத்தார். இந்தத் திருப்புமுனை போட்டியின் முடிவை சென்னைக்கு எதிராக மாற்றியது.
இந்நிலையில், ஆயுஷ் மாத்ரேவின் காயம் தற்போது சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பரிசோதனைக்குப் பிறகு அவரது காயத்தின் தன்மை தீவிரமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், இந்த ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து அவர் விலக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் இருந்த மாத்ரே தொடரிலிருந்து விலகுவது, பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறத் துடிக்கும் சென்னை அணிக்கு மிகப்பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சென்னை அணி நிர்வாகம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
