தமிழகத்தில் ஆளும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) திமுக எம்எல்ஏக்கள் 3 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு இணைந்துள்ள விவகாரம், மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தவெக அரசின் இந்த அதிரடி நகர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், நடுநிலையாளர்களும் தங்களது கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். சட்டமன்றத்தில் தங்களுக்குப் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கான வேலைகளில் தவெக இறங்கியுள்ள சூழலில், இந்த எம்எல்ஏக்களின் கட்சித் தாவல் தவெகவின் அரசியல் தூய்மை குறித்த விவாதங்களை மீண்டும் பற்றவைத்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தமிழகத்தில் ‘குதிரை வேகத்தில்’ குதிரை பேரம் நடப்பதாகச் சாடியுள்ள அவர், இந்த அரசியல் நாடகத்தை மூன்று காட்சிகளாக விவரித்துள்ளார். பெரும்பான்மை இல்லாத தற்போதைய நிலையில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் தவெக ஆதரவு கேட்பது முதல் காட்சி என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவின் ஒரு அணியையும், அமமுக உறுப்பினரையும் ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது இரண்டாம் காட்சி என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்திலேயே வைத்துத் தன் கட்சியில் தவெக இணைத்துக் கொள்வதை மூன்றாவது கண்றாவிக் காட்சியாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார். “மக்களை ஏமாற்றும் இந்தக் காட்சிகளைப் பார்க்கவா மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள்? ‘தூய சக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், இன்று ‘துயர சக்தியாக’ அம்பலப்பட்டு நிற்கிறார்கள்” என்று சாடியுள்ளார். அதோடு, என்டிஏ (NDA) ஆதரவைக் கோரக்கூடாது என்ற நிபந்தனையுடன் தவெகவிற்கு ஆதரவுக் கடிதம் கொடுத்துவிட்டு, தற்போது நடக்கும் குதிரை பேரங்களை அமைச்சரவையில் அமர்ந்து ரசித்து விசிலடிக்கும் காங்கிரஸின் போலி பாஜக எதிர்ப்பும் இதன் மூலம் பல்லிளிப்பதாக ஸ்டாலின் கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
