“ஸ்டாலின் விரக்தியில் ஏதேதோ பேசுகிறார்!.. உண்மை தெரிஞ்சா இப்படி பேசமாட்டீங்க”.. அன்புமணி ராமதாஸின் மரண மாஸ் அட்டாக்..!!

By Muthu Mani on வைகாசி 26, 2026

Spread the love

மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக முதல்வர் விஜய் நிர்வாகத்திற்காக நல்ல அதிகாரிகளை நியமித்துள்ளதாகப் பாராட்டியுள்ளார். கடந்த ஆட்சியில் காவல்துறையில் நல்ல அதிகாரிகள் இருந்தும், சரியான வழிகாட்டுதல் இல்லாததால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்ததாகக் குற்றம் சாட்டிய அவர், போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்துவேன் என்ற தேர்தல் வாக்குறுதிப்படி முதல்வர் விஜய் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், கோவையிலும் விழுப்புரத்திலும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதற்கு மதுபோதையே காரணம் என்று குறிப்பிட்ட அவர், குற்றவாளிகளுக்கு உடனடியாகத் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசு அறிவித்த 717 டாஸ்மாக் கடைகளில் விடுபட்ட மீதமுள்ள கடைகளையும் உடனடியாக மூட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நெடுஞ்சாலை, மின்சாரம், போக்குவரத்து, டாஸ்மாக் மற்றும் கனிமவளத் துறைகளில் முந்தைய ஆட்சியில் பெருமளவில் ஊழல் நடந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டினார். மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க வேண்டும் என்றும், கும்பகோணத்தைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கூட்டுறவு பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வோம் என்ற தவெகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் வாங்கப்பட்ட ரூ.4.96 லட்சம் கோடி கடனில் பெரும்பகுதி வட்டி கட்டுவதற்கே பயன்படுத்தப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைச் சரிசெய்ய மத்திய அரசு தமிழகத்திற்கு உதவ வேண்டும் என்றார். நல்லது செய்தால் பாராட்டுவோம், தவறு செய்தால் கடுமையாக எதிர்த்துப் போராடுவோம் என்றும் பாமக ஒரு ஆக்கப்பூர்வமான கட்சியாகச் செயல்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

   

முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தங்களுக்குச் சாதகமாக மக்கள் தீர்ப்பு அளித்துள்ளதை மதிக்க வேண்டும் என்றும், விரக்தியில் அவர் ஏதேதோ பேசி வருகிறார் என்றும் அன்புமணி விமர்சித்தார். ஸ்டாலின் முதல்வராகக் காரணமாய் இருந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் திமுக தயவால் வெற்றி பெற்றுவிட்டு, தற்போது தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் எனச் சாடினார். திமுக ஆட்சியில் மக்களுக்குக் கோபமில்லை என்று ஸ்டாலின் கூறுவது உண்மை நிலவரம் அவரது கவனத்திற்குச் செல்லாததையே காட்டுகிறது என்றும், அது வெறும் விளம்பர ஆட்சியாகவே இருந்தது என்றும் கூறினார். உலகளாவிய ரீதியில் ஈரான் போரால் பாதிப்புகள் இருந்தாலும், மற்ற நாடுகளை ஒப்பிடும்போது தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைவுதான் என்றும், 3 மாத காலத்திற்குத் தேவையான எரிபொருள் இருப்பு உள்ளதாகப் பிரதமர் கூறியுள்ள நிலையில் இந்த வாரங்களில் போருக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.