உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரைச் சேர்ந்த (காய்காட் பகுதி) ரீனா தேவி என்ற பெண், அண்மையில் சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது கணவர் சஞ்சய் சஹ்னியின் உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தனது ஒரு சிறுநீரகத்தை (Kidney) தானமாக வழங்கியிருந்தார். ஏற்கனவே அவரது குடும்பம் பெரும் மருத்துவச் செலவுகளாலும், மன உளைச்சலாலும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது.
அடுத்த சில மாதங்களில் தனது மகளுக்குத் திருமணம் நடத்தத் திட்டமிட்டிருந்த ரீனா தேவி, அதற்காகப் பல வருடங்களாக சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த சுமார் 6 லட்சம் ரூபாய் பணத்தைச் சைபர் குற்றவாளிகள் ஆன்லைன் மோசடி மூலம் திருடியுள்ளனர். கடந்த ஏப்ரல் 26 அன்று ரீனா தேவியின் மொபைல் சிம் கார்டு திடீரென செயலிழந்தது (Block). அதை அவர் மீண்டும் சரிசெய்த போதும், அது மறுபடியும் முடக்கப்பட்டது. இந்தச் இடைவெளியைப் பயன்படுத்திய மோசடிக்காரர்கள் ஏப்ரல் 30 முதல் மே 6 வரையிலான காலகட்டத்தில், 12 தவணைகளாக அவரது வங்கிக் கணக்கில் இருந்து ஒட்டுமொத்தமாக ₹49,980 வீதம் அனைத்துப் பணத்தையும் திருடியுள்ளனர்.
கடந்த மே 14 அன்று ஏடிஎம் சென்றபோதும், மே 15 அன்று வங்கியில் பாஸ்புக்கை அப்டேட் செய்தபோதும் தனது கணக்கில் பணம் எதுவும் இல்லாமல் ‘பூஜ்ஜியம்’ (Zero) ஆகிவிட்டதை அறிந்து ரீனா தேவியின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இன்னும் 2, 3 மாதங்களில் மகளின் திருமணம் நடக்கவிருக்கும் சூழலில், ஒட்டுமொத்தச் சேமிப்பையும் இழந்ததால் அந்தக் குடும்பம் செய்வதறியாது திகைத்து நிற்கிறது. இதுகுறித்து ரீனா தேவி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். டிஎஸ்பி ஹிமான்ஷு குமார் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் தேவேந்திர குமார் தலைமையில் போலீசார் வங்கிப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
