தூத்துக்குடி மாவட்ட மீன்பிடி துறைமுகப் பகுதியில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கடந்த 24 ஆம் தேதி தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், தனக்குச் சமூகம் ரீதியாகப் பரிச்சயமானவரான பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்த மோகித் என்பவர், தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து விருப்பத்திற்கு மாறாகத் தன்னை மீன்பிடி துறைமுகப் பகுதிக்கு அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து பாலியல் வன்கொடுமை செய்த கும்பல், அவர் வைத்திருந்த 2,500 ரூபாய் ரொக்கப் பணம், ஒரு கைப்பேசி மற்றும் இரண்டு வெள்ளி மோதிரங்கள் ஆகியவற்றையும் வலுக்கட்டாயமாகப் பறித்துச் சென்றதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சிப் புகாரின் அடிப்படையில் உடனடியாகச் செயல்பட்ட தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், குற்ற எண் 49/2026-இன் கீழ் பாரதிய நியாயச் சட்டம் (BNS) பிரிவுகள் 296 (b), 126(2), 115 (2), 309 (4) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து அதிரடி விசாரணையில் இறங்கினர்.
இக்குற்றச்சாட்டுகள் குறித்துத் தீவிர விசாரணை நடத்த தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. சுனில் அவர்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்தத் தனிப்படைகளின் துரித நடவடிக்கையால், குற்றம் சாட்டப்பட்ட அந்தோணிராஜ் மகன் மோகித் (25), ஜேசு நசரின் மகன் ரிதீஷ் (19) மற்றும் ஜெயக்குமார் திலோத் பெர்லி (21) ஆகிய மூன்று பேரும் சில மணி நேரங்களிலேயே போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். தற்போது பாதிக்கப்பட்ட பெண் மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், போலீஸார் இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
