கர்நாடக மாநிலம் எல்லாப்பூர் நகரில், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த 30 வயதுப் பெண், தனது பால்ய கால நண்பரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஞ்சிதாவிற்கும் ரபீக்கிற்கும் பள்ளிப் பருவத்திலிருந்தே நட்பு இருந்துள்ளது. ரஞ்சிதாவிற்கு திருமணமாகி 10 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளாகக் கணவரைப் பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். அரசுப் பள்ளியில் மதிய உணவு உதவியாளராகப் பணியாற்றி வந்த ரஞ்சிதாவை, ரபீக் அடிக்கடி சந்தித்து வந்ததோடு, தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு ரஞ்சிதாவும் அவரது குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ரபீக், கடந்த சனிக்கிழமை வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ரஞ்சிதாவை வழிமறித்துக் கூர்மையான ஆயுதத்தால் சரமாரியாகக் குத்தியுள்ளார். ரஞ்சிதா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தப்பியோடிய ரபீக்கை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், சில மணி நேரங்களிலேயே அவர் அருகிலுள்ள வனப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். உயிரிழந்த ரபீக்கின் உடலுக்கு அருகில் மதுபாட்டில்கள் மற்றும் கயிறு இருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
