ஸ்ரீநகரிலிருந்து டெல்லி வழியாக மும்பை செல்வதற்காக இணைப்பு விமானத்தில் பயணித்த நபர் ஒருவர், டெல்லி விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அலட்சியத்தால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார். மாலை 4 மணிக்கு புறப்பட வேண்டிய விமானத்தை தொடர்ந்து தாமதப்படுத்தி, இறுதியில் முற்றிலும் ரத்து செய்துள்ளனர். இது குறித்து பயணி கேள்வி கேட்டபோது, அடுத்த விமானம் எப்போது புறப்படும் அல்லது இயக்கப்படுமா என்பது பற்றிய எந்தத் தெளிவான தகவலையும் வழங்காமல், அவரது பயணச்சீட்டையும் ஊழியர்கள் வாங்கி வைத்துக்கொண்டு அலட்சியமாகப் பதிலளித்துள்ளனர்.
மேலும், அடுத்த விமானம் 2 நாட்களுக்குப் பிறகே உள்ளது என்றும், “உங்களால் முடிந்தால் புகார் அளித்துக் கொள்ளுங்கள்” என்றும் ஊழியர்கள் கூறியதால் அங்கு பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. நடுவழியில் தவித்து நிற்கும் பயணியின் தவிப்பு குறித்து எந்தப் பொறுப்பும் ஏற்காத ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் பயணிகள் மற்றும் இணையவாசிகளின் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.
