திமுக முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்டச் செயலாளருமான அன்பில் மகேஸ் வீட்டில் இன்று காலை முதல் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக மத்திய குற்றப்பிரிவு போலிஸார் தீவிரச் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் வரும் 18-ஆம் தேதி சென்னை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அவருக்குச் சம்மன் வழங்கப்பட்டது.
சோதனைக்குப் பின் வீட்டை விட்டு வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த அன்பில் மகேஸ், “ஆளுங்கட்சியான தவெக அரசின் இந்த மிரட்டல் உருட்டல்களுக்கெல்லாம் திமுகவின் கடைகோடித் தொண்டன் கூட அஞ்சமாட்டான். 18-ஆம் தேதி சம்மனுக்கு ஆஜராகிவிட்டு, அங்கிருந்து நேராகத் தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்குத்தான் செல்வேன். இந்த இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெற்று தவெக முகத்தில் கரியைப் பூசும்” என ஆவேசமாகப் பேசினார்.
மேலும், “என் வீட்டில் நடைபெற்ற இந்தச் சோதனைக்கு பின்னால் யார் யாரின் தூண்டுதல் இருக்கிறது என்பதெல்லாம் எனக்குத் தெரியும். காலம் வரும்போது அத்தனை பேருக்கும் வட்டியும் முதலுமாய் சேர்த்துத் திருப்பிக் கொடுப்பேன். காவல்துறையினர் சிலரிடம் சென்று குறிப்பிட்ட நபரின் பேரைக் கேட்டு மிரட்டுவதை நிறுத்த வேண்டும்” எனப் பஞ்ச் டயலாக் பேசி அதிரடி பதிலடி கொடுத்துள்ள சம்பவம் தமிழக அரசியல் களத்தில் மாபெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
