உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஜாஜ்மவ் பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் காம்பவுண்ட் சாலையில், உணவுகளை டெலிவரி செய்வதற்காக வாலிபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது, யாருமே எதிர்பாராதவிதமாக நடுரோட்டில் திடீரென அமைந்திருந்த மாபெரும் ஆழமான பள்ளத்தில், அந்த டெலிவரி பாய் பைக்குடன் தூக்கி வீசப்பட்டு உள்ளே விழுந்தார். தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்து அலறிய வாலிபரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் பாதசாரிகள் உடனடியாக ஓடிவந்து, பள்ளத்தில் கிடந்த வாலிபரையும் அவரது பைக்கையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகித் தீயாய் பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “மத்திய அமைச்சர் நிதின் கட்கரி… இதோ பாருங்கள் உங்கள் ஸ்பேஸ் டெக்னாலஜி சாலைகளை!” என்று இணையத்தில் கழுவி ஊற்றி வருகின்றனர். உபி ரோட்டில் நடந்த இந்த பயங்கர விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
