தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு பக்கம் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தை என மும்முரமாக செயல்பட்டு வருகிறார்கள். இதனிடையே விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது.
அதே சமயம் சமீபத்தில் நடந்த கரூர் துயரத்தில் விஜய்க்கு சட்டரீதியாக பல சிக்கல்கள் வந்த நிலையில் அதனை பொறுமையாக கையாண்டு மீண்டும் கட்சியை மீட்டெடுத்துள்ளார். அடுத்தடுத்து கட்சியை வலுப்படுத்துவதற்கான பணிகளை விஜய் தீவிரப்படுத்தி உள்ளார். சமீபத்தில் கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் சந்தித்து பேசி இருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் கட்சியின் அரசியல் பணிகள் வேகம் எடுத்துள்ளது.
இந்நிலையில் கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் கட்சியின் அடுத்த கட்ட செயல்பாடுகள், தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்க சென்னை மாமல்லபுரத்தில் நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கட்சி சார்பில் வெளியிட்டுள்ள பதிவில், பொதுக்குழு கூட்டத்திற்கான அழைப்பு கடிதம், கட்சி அடையாள அட்டை வைத்திருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அடையாள அட்டையை கட்டாயம் தவறாமல் கொண்டு வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
