இந்திய சினிமாவில் அதிக பாடல்களை பாடிய ஆண் பாடகர் என்ற பெருமைக்குரியவர் எஸ் பி பாலசுப்ரமணியன். இவர் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட எஸ் பி பி சென்னையில் படிக்கும்போது பாடல்கள் பாடுவதில் ஆர்வம கொண்டு அதற்கான வாய்ப்புகளை தேடி வந்தார். அவருக்கு முதலில் பாட வாய்ப்புக் கிடைத்தது தெலுங்கு சினிமாவில்தான்.
1966-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமண்ணா என்ற படத்தின் மூலம் பாடகராக அறிமுகமான எஸ்.பி.பி 1969-ம் ஆண்டு தமிழில் ஹோட்டல் ரம்பா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் இந்த படம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழில், சாந்தி நிலையம் என்ற படத்தில் இடம்பெற்ற இயற்கை என்னும் இளையகன்னி என்ற பாடல் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானார்.
எம் ஜி ஆருக்காக ஆயிரம் நிலவே வா பாடலை பாடிய பின்னர் கவனிக்கப்படும் பாடகர் ஆனார். ஆனால் அவர் உச்சத்துக்கு சென்றது இளையராஜாவின் வருகைக்குப் பிறகுதான். இளையராஜா இசையில் அதிக பாடல்களை பாடிய பாடகர் என்றால் அது எஸ் பி பிதான். சில ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தார். அது இன்னமும் தமிழ் சினிமா ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு மரணமாக இருக்கிறது.
80 களில் தமிழ் சினிமாவில் நட்சத்திரப் பாடகராக உருவாகி வந்த அவரைத் தன்னுடைய ஏக் தெ துஜே கேலியே படத்தின் மூலம் இந்தியில் அறிமுகப்படுத்தினார். அந்த படத்தில் லஷ்மிகாந்த் பியாரிலால் இசையில் லதா மங்கேஷ்கரோடு இணைந்து பாடலை பாடியுள்ளார் எஸ் பி பி. அப்போது அவருக்கு இந்தி வரிகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என லதா மங்கேஷ்கர் சொல்லிக் கொடுத்தாராம்.
ஆனாலும் அவ்வளவு பெரிய பாடகி முன்னால் பாடப் போகிறோம் என்ற பதற்றத்திலேயே இருந்துள்ளார் எஸ் பி பி. அதன் காரணமாக காஃபியை அவர் சேலை மேல் கொட்டிவிட்டாராம். ஆனால் அதை லதா ஜி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். இதை ஏக் து ஜே கேலியே படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய சுரேஷ் கிருஷ்ணா பகிர்ந்துள்ளார்.