அதிர்ச்சி… இறந்த தாய்க்கு இறுதி சடங்கு செய்யாமல்… வீட்டுக்குள்ளேயே வைத்து என்ன செய்கிறார்?… கொல்லத்தில் பரபரப்பு…!

By Swetha on ஆடி 26, 2026

Spread the love

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள குளத்துப்புழா பகுதியில், இறந்த தாயின் உடலை வெளியே சொல்லாமல் 5 நாட்களாக வீட்டிலேயே வைத்து மகன் பூஜை செய்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள ரப்பர் தோட்டக் குடியிருப்பில் சின்னத்தம்மா (90) என்ற மூதாட்டி, தனது மகன் கிருஷ்ணசாமியுடன் வசித்து வந்தார். வயோதிகம் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த புதன்கிழமை சின்னத்தம்மா உயிரிழந்த நிலையில், கிருஷ்ணசாமி இதுகுறித்து யாருக்கும் தெரிவிக்காமல் மறைத்துள்ளார். பின்னர் பாட்டியைப் பார்க்க வந்த கிருஷ்ணசாமியின் மகள் உடலைக் கண்டு அதிர்ச்சியடைந்து உறவினர்களுக்கும் காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த குளத்துப்புழா காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கிருஷ்ணசாமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் செயல்பட்டது தெரியவந்தது. தாயின் மறைவை ஏற்றுக்கொள்ள முடியாத அவர், உடலை வீட்டிலேயே வைத்துள்ளார். மேலும், துர்நாற்றம் வீசாமல் இருக்க தினமும் உடலை ஈரத்துணியால் துடைத்து, பவுடர் தூவி, வெள்ளைத் துணியால் மூடி வைத்து பூஜைகள் செய்து பராமரித்து வந்துள்ளார். கிருஷ்ணசாமி யாரிடமும் அதிகம் பேசாதவர் என்பதால், வீட்டிற்குள் நடந்த இந்த விநோத சம்பவம் அக்கம்பக்கத்தினருக்குத் தெரியாமல் போயுள்ளது.

   

இதையடுத்து, மூதாட்டியின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், அதை பிரேத பரிசோதனைக்காக பரிப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணசாமியிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதுடன், அவரது மனநல நிலை குறித்தும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.