மாமனார் மீது இவ்வளவு பாசமா…? ரூ.1.5 கோடியில் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய மருமகன்… வைரலாகும் நெகிழ்ச்சி சம்பவம்…!!

By Devi Ramu on கார்த்திகை 5, 2026

Spread the love

பொதுவாக மாமனார் – மருமகன் உறவு என்றாலே மனக்கசப்புகள் அதிகம் பேசப்படும் சூழலில், தனக்கு வாழ்வளித்த மாமனாருக்கு ரூ.1.5 கோடி மதிப்பில் பிரம்மாண்டமாகக் கோவில் கட்டி, கும்பாபிஷேகம் நடத்தியுள்ள மருமகனின் செயல் தமிழகம் முழுவதும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை போரூரை அடுத்த ஐயப்பன்தாங்கல் ஊராட்சியைச் சேர்ந்த பெரியநாயகம் என்பவர் கடந்த 2021-ஆம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மகள் அனிதாவின் கணவரான சாரதி, தனது மாமனார் பெரியநாயகத்தை வெறும் குடும்ப உறவாக மட்டும் பார்க்காமல், தங்களது குடும்பத்தின் குலதெய்வமாகவும் வழிகாட்டியாகவும் கருதி வந்துள்ளார். அவரது நினைவை நிலைநிறுத்த ஐயப்பன்தாங்கல் பகுதியில் சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெண்மை நிறப் பளிங்கு கற்களால் அழகிய கோவிலை எழுப்பினார்.

   

கருவறையில் வைப்பதற்காகச் சிற்பக்கலைக்கு பெயர்போன கும்பகோணத்தில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பில் 6 அடி உயர பெரியநாயகத்தின் முழு உருவச் சிலை செதுக்கப்பட்டு வரவழைக்கப்பட்டது. சமீபத்தில் ஆகம விதிகளின்படி யாகசாலைகள் அமைக்கப்பட்டு கோபுரக் கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றது. மேலும், பெரியநாயகத்தின் நினைவாக அறக்கட்டளை தொடங்கி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம், கல்வி உதவித்தொகை வழங்கி வரும் சாரதியின் இந்த நன்றி உணர்வை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.