விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு – பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான சம்பவம் 24 நாட்களைக் கடந்து நீடித்து வருகிறது. கடந்த அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் விமரிசையாகக் கொண்டாடிவிட்டு, தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய குழந்தை நள்ளிரவில் திடீரெனக் காணாமல் போனார். உள்ளூர் போலீசார் 10 நாட்கள் தீவிரமாகத் தேடியும் எந்தவொரு முக்கியத் துப்பும் கிடைக்காததால், இவ்வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.
சிபிசிஐடி அதிகாரிகள் களமிறங்கியதைத் தொடர்ந்து, விசாரணையின் போக்கே பல கோணங்களில் முடுக்கிவிடப்பட்டது. தாய் பவானி, பாட்டி, தந்தை வடிவேலு ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளுடன், சிறையில் இருந்து வெளியில் வந்த பழைய குற்றவாளி ராஜதுரை, அவரது கூட்டாளி அரவிந்த், அப்பகுதியில் உள்ள சாமியார்கள், சுடுகாடுகள், அடர்ந்த காட்டுப் பகுதிகள் மற்றும் சம்பவ நாளன்று நள்ளிரவில் அப்பகுதியைக் கடந்து சென்ற 14 நேஷனல் பெர்மிட் லாரிகள் வரை பல சந்தேகத்திற்குரிய கோணங்களில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில், வழக்கில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, “நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள புகழ்பெற்ற தாதகிரி முருகன் கோவிலில் ஹேமலதாவைப் போன்ற உருவ அமைப்புக் கொண்ட சிறுமியை வயதான தம்பதியினருடன் பார்த்தேன்” என்று பெண் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்குத் தகவல் அளித்தார். இத்தகவலின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட தனிப்படை போலீசார், நாமக்கல்லுக்கு விரைந்து சென்று தங்களது தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பெண் அளித்தத் தகவலின் அடிப்படையில், சேந்தமங்கலம் தாதகிரி முருகன் கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள அனைத்துக் கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் தனிப்படையினர் கைப்பற்றினர். சிறுமி கோவிலுக்கு வந்ததாகக் கூறப்பட்ட அக்டோபர் 29 மற்றும் அதற்குப் பிந்தைய நாட்களின் வீடியோ காட்சிகளைப் பெற்று, கோவிலுக்குள் நுழைந்த நபர்கள் யார், அந்தச் சிறுமியின் நடை, உடை மற்றும் உடல் அங்க அடையாளங்கள் ஹேமலதாவுடன் ஒத்துப்போகிறதா என்பதைத் துல்லியமாக உருப்பெருக்கி (Zoom) ஆய்வு செய்து வருகின்றனர்.
கோவில் வளாகம் மட்டுமின்றி, கோவிலுக்குச் செல்லும் பிரதான சாலைகள், சந்திப்புகள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சுமார் 15-க்கும் மேற்பட்ட தனியார் சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீசார் சேகரித்துள்ளனர். சந்தேகத்திற்குரிய நபர்கள் கார், பைக் அல்லது பேருந்தில் வந்தார்களா, அவர்கள் நாமக்கல் நகருக்குள் நுழைந்தார்களா அல்லது மோகனூர், ராசிபுரம் வழித்தடங்களில் சென்றார்களா என்பதைக் கண்டறியும் பணியில் தனிப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
“என் மகள் கண்டிப்பதாக உயிருடன் பத்திரமாகத்தான் இருக்கிறாள்” என்று தாய் பவானி தொடர்ந்து நம்பிக்கையுடன் தெரிவித்து வந்த நிலையில், தற்போது நாமக்கல் பகுதியில் சிசிடிவி காட்சிகள் சிக்கியிருப்பது இவ்வழக்கில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் எல்லையைத் தாண்டி நாமக்கல்லில் தீவிரமடைந்துள்ள இந்த விசாரணை, கடந்த 24 நாட்களாகப் பசி பட்டினியோடு கண்ணீரில் தவித்து வரும் அக்குடும்பத்தினருக்கு விரைவில் ஒரு நல்ல செய்தியைக் கொண்டு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
