தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் பகுதியில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம் மையத்தில் நள்ளிரவில் புகுந்து திருட முயன்ற நபரை பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து சமயோசிதமாக கைது செய்துள்ளனர். ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த அந்த நபர், அங்கிருந்த அலாரத்தின் வயரைத் துண்டித்துவிட்டு ஷட்டரை மூடிக் கொண்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அலாரம் துண்டிக்கப்பட்டவுடன் வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு தானியங்கி எச்சரிக்கை செய்தி சென்றுள்ளது.
தலைமை அலுவலகத்திலிருந்து கிடைத்த தகவலின் பேரில், வங்கி நிர்வாகத்தினர் உடனடியாக பூதலூர் பகுதியில் உள்ள உள்ளூர் வணிகர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த வணிகர்கள் விரைந்து வந்து ஏடிஎம்-மின் ஷட்டரை வெளியிலிருந்து முழுமையாக மூடிப் பூட்டி, தப்பிச் செல்ல முடியாதவாறு அவரைச் சிறைபிடித்தனர். பின்னர் உடனடியாக பூதலூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஷட்டரைத் திறந்தபோது, கையில் கம்புடன் நின்றிருந்த அந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. மேலும், தான் ஏடிஎம்மை சுத்தம் செய்ய வந்ததாகவும், பணம் எடுக்க வந்தபோது ஷட்டர் தானாகவே மூடிக் கொண்டது என்றும் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார்.
தற்போது மணிகண்டனைக் கைது செய்துள்ள காவல் துறையினர், அவருக்கு உதவியாகக் கூட்டாளிகள் யாரேனும் வந்தனரா மற்றும் அவர் மீது வேறு ஏதும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதா எனப் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, ஏடிஎம் ஷட்டருக்குள் பூட்டி வைக்கப்பட்ட நபர் கதவைத் தட்டியதும், காவல் துறையினர் அவரை மீட்டு விசாரணைக்கு அழைத்துச் சென்றது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
