“அம்மா திரும்பி வருவாங்க”… எதிர்பாராமல் ஏற்பட்ட திடீர் வெள்ளம்… அடித்துச் செல்லப்பட்ட தமிழக பேருந்து… மாயமான 37 பேர்… தாய் குறித்து மகன் கண்ணீர் பேட்டி…!!

By Gayathri on ஆவணி 28, 2026

Spread the love

கும்பகோணத்தைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 57 பேர் நேபாளத்திற்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் இவர்கள் பயணித்த மூன்று பேருந்துகளில் ஒன்று சிக்கி அடித்துச் செல்லப்பட்டது; மற்றொன்றின் நிலை என்னவென்று இதுவரை கண்டறியப்படவில்லை. ஒரு பேருந்து மட்டும் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ள நிலையில், மாயமான இரண்டு பேருந்துகளில் பயணித்த சுமார் 37 பேரின் தற்போதைய நிலை குறித்து எந்தத் தகவலும் கிடைக்காததால் அவர்களின் குடும்பத்தினர் பெரும் சோகத்திலும் அச்சத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

இந்த நெருக்கடியான சூழலில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ரேவதி மாயமானவர்களின் உறவினர்களை ஒன்றிணைத்து வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கி, மீட்புப் பணிகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து ஆறுதல் அளித்து வருகிறார். இந்த யாத்திரைக்குச் சென்று மாயமான தஞ்சையைச் சேர்ந்த இளவரசி என்பவரின் மகன் முரளி கூறும்போது, நீண்ட நாள் கனவான இப்பயணத்திற்காகத் தனது தாய் சிறுகச்சிறுக பணம் சேர்த்ததாகத் தெரிவித்தார். இறுதியாகப் பேசி புகைப்படங்களை அனுப்பிய நிலையில், தற்போது எவ்விதத் தொடர்பும் இல்லாதது தங்களுக்குப் பெரும் கவலையை அளித்தாலும், மாவட்ட நிர்வாகத்தின் தொடர்ச்சியான வழிகாட்டுதல்களால் அவர் பத்திரமாகத் திரும்புவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்பதாகத் தெரிவித்தார்.