அதிர்ச்சி..! அங்கன்வாடி சத்துணவு மாவு பொட்டலத்தில் இறந்து கிடந்த பாம்பு குட்டி… திறந்து பார்த்த கர்ப்பிணி பெண் அலறல்..!!

By Soundarya on ஆனி 8, 2026

Spread the love

மத்திய பிரதேச மாநிலம் பந்துர்னா மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில், கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட சத்துணவுப் பொட்டலத்தில் இறந்த பாம்பு குட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார்காட் கம்தி கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணியான வச்சல பாய் துர்வே என்பவர், தனது கிராமத்து அங்கன்வாடி மையத்திலிருந்து ஊட்டச்சத்து லட்டுப் பொட்டலத்தைப் பெற்றுச் சென்றுள்ளார். வீட்டிற்குச் சென்று அந்தப் பொட்டலத்தைத் திறந்து பார்த்தபோது, அதனுள் இறந்த நிலையில் ஒரு சிறிய பாம்பு குட்டி கிடப்பதைக் கண்டு அவரும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த அதிர்ச்சிகரமான தகவல் கிராமம் முழுவதும் காட்டுத்தீ போல் பரவியதால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் அங்கன்வாடி மையத்தின் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு அங்கன்வாடிகள் மூலம் கர்ப்பிணிப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து அவர்கள் தங்களது கடும் கவலையையும், கண்டனத்தையும் பதிவு செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட உணவுப் பொட்டலங்களை தயாரித்து விநியோகித்த ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது கடுமையான சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தினர்.

   

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அதிகாரிகள், உள்ளூர் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அந்தப் பொட்டலத்தைக் கைப்பற்றிய அதிகாரிகள், அதிலிருந்த உணவு மாதிரிகளைச் சேகரித்து போபாலில் உள்ள மாநில உணவுப் பரிசோதனை மையத்திற்கு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரிக்க ஐந்து பேர் கொண்ட குழுவை மாவட்டப் பொறுப்பு ஆட்சியர் அமைத்துள்ளதோடு, ஆய்வக அறிக்கை கிடைத்த பின் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.