தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் வணிக மதிப்புக் கொண்ட நடிகர்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். ரஜினி, கமல், விஜய், அஜித்துக்கு அடுத்தபடியாக அவரது படங்கள் அதிக கலெக்ஷன் செய்வதாக சினிமா வட்டாரங்கள் சொல்கின்றன.
அவரும் வணிக மதிப்புக் கொண்ட கதைகளையே தேடியெடுத்து நடித்து வருகின்றார். அவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியது நடிகர் தனுஷ். தன் மனைவி இயக்கிய 3 படம் மூலமாக அவரைக் காமெடியனாக அறிமுகப்படுத்தினார். அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஆனால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷ் முதலில் தேர்வு செய்தது சந்தானத்தைதானாம். அப்போது சந்தானம் மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்தார். அவரும் நடிகக் சம்மதம் தெரிவித்தாராம். ஆனால் ஷூட்டிங் நெருங்கும் சமயத்தில் அவர் படத்திலிருந்து விலகிக் கொண்டாராம். அதற்குக் காரணம் சிம்புதானாம். சினிமாவில் தன்னை அறிமுகப்படுத்திய சிம்பு சொன்னதால் சந்தானம் அதைக் கேட்டு அந்த படத்தில் இருந்து விலகியுள்ளார்.
அதன் பிறகுதான் தனுஷ், சிவகார்த்திகேயனை அந்த வேடத்துக்கு தேர்வு செய்து நடிக்கவைத்தாராம். அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து சிவகார்த்திகேயனை ஹீரோவாக்கி எதிர்நீச்சல் படத்தை எடுத்தார் தனுஷ். அந்த படமும் ஹிட்டானது. அதன் பின்னர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அசுர வேகத்தில் சென்றது. தனுஷை விட பெரிய ஹீரோவாக சிவகார்த்திகேயன் வளர்ந்தார். சமீபத்தில் ரிலீஸான அவரின் அமரன் திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து அவரை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் “சில ஆண்டுகளுக்கு முன்னர் சினிமாவை விட்டு விலக நினைத்தேன். என் மீது வரும் அழுத்தம் என் குடும்பத்தைப் பாதிக்கக் கூடாது என நினைத்தேன். அப்போது என் மனைவிதான் ‘கடந்த 20 ஆண்டுகளில் அஜித், விக்ரம் தவிர்த்து சினிமா பின்புலம் இல்லாமல் சினிமாவில் சாதித்தது நீங்கள்தான் என்று சொல்லி என்னை மாற்றினார்’. எப்போதும் எனக்குப் பக்கபலமாக இருப்பவர் என் மனைவிதான்” எனக் கூறியுள்ளார்.
