ஷூட்டிங்கில் அழுத சரோஜா தேவி…கேமராமேனைக் கண்டபடி திட்டிய சிவாஜி கணேசன்.. என்ன நடந்தது?

By vinoth on பங்குனி 29, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தக்கவைத்து புகழின் உச்சியில் இருந்தார். சிவாஜி நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது, அவரை பராசக்தி படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார். கருணாநிதி கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் படம் வெளியாகி அதுவரை காணாத வெற்றியைப் பெற்றது.

அதன்பின்னர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக 200 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்து பல வெள்ளி விழா படங்களைக் கொடுத்துள்ளார். அவர் படத்தில் அவரோடு நடிப்பவர்கள் சிறந்த நடிப்பை வழங்கும் விதமாகப் பார்த்துக் கொள்வார்.

   

சிவாஜி கணேசனோடு அதிக படங்களில் கதாநாயகியாக நடித்தவர்களில் ஒருவர் சரோஜா தேவி. தாங்கள் இருவரும் இணைந்து நடித்த இருவர் உள்ளம் என்ற திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான தகவலை சரோஜா தேவி சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

   

அதில் “நானும், சிவாஜி சாரும் பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்திருக்கிறோம். அந்த படங்களில் என் நடிப்பு சிறப்பாக இருந்தது என்றால் அதற்கு காரணம் நடிகர் திலகம் தான். அவரின் இருவர் உள்ளம் படத்தில் நான் நடித்திருந்தேன். இந்த படத்தில் அவர் ஒரு ப்ளே பாயாக நடித்திருப்பார்.

 

இந்த படத்தின் ஒரு காட்சியில் என்னை பார்த்து எனக்கென்ன படிப்பில்லையா? பணமில்லையா, அழகில்லையா நீ ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்குற என்று கேட்பார். அவர் கேட்ட அந்த ஸ்டைலில் மயங்கி நான் என் டைலாக்கை மறந்துவிட்டேன். அதன் பிறகு ஒரு ரீடேக் ஆச்சு, அடுத்து 2-வது ரீடேக் ஆனதும். காட்சி சரியாக வரவில்லை என்பதால், நான் அழ ஆரம்பித்துவிட்டேன்.

நான் அழுதால் ஷூட்டிங் தடைபடும் என்பதால் சிவாஜி சார் உடனே ‘சரோஜா நல்லா தான் நடிச்ச. நீ ஒழுங்கா எடுக்கல என கேமராமேனை வேண்டுமெனவே திட்டுவது போல நடித்தார். பிறகு என்னை சமாதானப்படுத்தி அந்த காட்சியை திருப்திகரமாக எடுக்க வைத்தார்” எனக் கூறியுள்ளார்.