கடந்த 1966 ஆம் ஆண்டு ஏ பி நாகராஜன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் சரஸ்வதி சபதம். சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன், சாவித்திரி, பத்மினி, கே ஆர் விஜயா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த திரைப்படத்திற்கு கேவி மகாதேவன் இசையமைக்க கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் எழுதி இருந்தார். புராண கதையை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் ஒரு காட்சியில் யானை சிவாஜியை மிதித்து கொள்வதற்காக வரும்.

அந்த காட்சிக்காக ஒத்திகை பார்க்கும்போது சிவாஜிக்கு பதிலாக ஒரு மரப்பெட்டியை வைத்து ஒத்திகை பார்த்துள்ளனர். இந்த ஒத்திகையில் யானை பெட்டியை மிதிக்க வரும்போது இயக்குனர் நில் என்று சொன்னாலும் அவருடைய பேச்சைக் கேட்காமல் யானை பெட்டியை மிதித்துள்ளது. யானையின் இந்த செயலால் அதிர்ச்சியான இயக்குனர் ஏபி நாகராஜன் அந்த காட்சியில் நீங்கள் நடிக்க வேண்டாம், வேறு ஒரு நபரை வைத்து எடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று சிவாஜி இடம் கூறியுள்ளார்.

ஆனால் அதனை ஏற்காத சிவாஜி வேறு யாராவது நடித்தால் நடிப்பில் உயிர் இருக்காது, அதனால் நானே நடிக்கிறேன் என்று கூறி அதில் நடித்துள்ளார். அந்த காட்சியில் யானை மிதிக்க வரும்போது சிவாஜி நில் அப்படியே திரும்பி செல் என்று கூறியுள்ளார். ஒத்திகையின் போது இயக்குனரின் பேச்சை கேட்காத அந்த யானை படப்பிடிப்பின் போது சிவாஜி சொன்ன வார்த்தையை கேட்டு அப்படியே பின்னோக்கிச் சென்றுள்ளது. இதனைக் கண்டு இயக்குனர் மட்டுமல்லாமல் அங்கிருந்து அனைவருமே ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
